Tuesday 3 May 2011

Health Care


உடலெனும் பிரபஞ்சம் 
ஊனுடம்பே ஆலயம்...

            ர சுவாசம் மேற்கொள்ளும்போது நாசி வழி சுவாசம் வெகுவாக குறைந்து சிரசு வழி சுவாசம் மூலாதாரத்திற்கு ஏற்றி இறக்கும் நிலைதான் சித்தர் நிலையாகும்.  இந்த நிலையில்தான் சித்தர்கள் ஞானம் அடைந்தனர் என்று கடந்த இதழில் அறிந்தோம்.

சர சுவாசத்தினால் உண்டாகும் சரநிலை உடலை செம்மையாக்குகிறது.  அன்றாட வாழ்க்கையில் உடலானது பல  செயல் பாடுகளில் ஈடுபடும்போது நோய்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

சித்தர்களின் கூற்றுப்படி இவ்வாறு பல நோய்கள் தாக்கக் காரணம் வாதம், பித்தம்,  கபம் என்னும் மூன்றும் அதனதன் நிலை மாறி இருப்பது, ஒன்றுக்குப்பின் முரணாக செயல்படுவதே இதற்கு காரணம்.

இந்த வாதம், பித்தம், கபம் போன்றவை புறச்சூழ்நிலைக ளாலும் அகச் சூழ் நிலைகளாலும் அதனதன் நிலை யிலிருந்து மாறும் போதும் அல்லது மூன்றில் ஏதாவது ஒன்று மிகும் போதும் உடல் நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது.

இந்த வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நிலைகளும் உலகில் எந்த ஒரு மனிதனிடமும் காணப்படக்கூடியதுதான். மனிதனுடைய உடற் கூறுகளைப் பொறுத்து இதன் தன்மைகள் அமையும்.

சரசுவாசத்தின் மூலம் சரநிலையை அடையும் போது இந்த வாத, பித்த கபத்தின் நிலை மாறுவதை தடுக்கிறது.  புற, அக சூழ்நிலை மாற்றங்கள் ஏதும் உடலில் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.  மேலும் உடலுக்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கிறது.  எப்போதும் புத்துணர்ச்சியையும், மனதில் தெளிவையும் ஏற்படுத்துகிறது.  இந்த சரசுவாசத்தின் மூலம் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

பிரபஞ்ச சக்தி என்பது சரசுவாசம் மூலம் கிடைப்பதுதான்.  இதுதான் ஞான மார்க்கத்திற்கு வழி வகுக்கும்.  

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே

என்று திருமூலர் தன் திருமந்திரத்தில் பாடியுள்ளார்.

பாடலின் விளக்கம்  

இறைவன் அதாவது பிரபஞ்ச சக்தி தேடி எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை.  அந்த பிரபஞ்ச சக்தி உங்கள் உடம்பினுள்ளேயே வாசம் செய்கிறது.  உங்கள் உடம்பே ஆலயம்.  ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற ஆன்றோர்களின் வாக்குப்படி, புனிதமான ஆலயமாகிய உங்கள் உடலை பாழ்படுத்தி விடாமல் பாதுகாத்து அதில் குடிகொண்டிருக்கும் இறை சக்தி என்ற பரமாத்மாவைக் காணுங்கள் என்கிறார் திருமூலர்.

உடலை கோவிலாகத்தான் சித்தர்கள் எண்ணி வந்துள்ளனர்.  இந்த உடம்பு என்னும் ஆலயத்திலிருந்து அண்டசாரங்களையும் அதன் மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்களையும் அறிந்து கொண்டனர்.  உடலில் பிரபஞ்ச கக்தியைக் கொண்டு பரமாத்மாவை கண்டனர்.  உடலை பேணிப் பாதுகாத்து அதிலிருக்கும் சக்தியை அடைய சரசுவாசமே சிறந்த வழியாகும்.

சரசுவாசம் மேற்கொள்ள உடலை நன்கு பேண வேண்டும்.  அதனால்தான் இந்த உடம்பை ஆலயத்திற்கு ஒப்பிடுகின்றனர் சித்தர்கள். பிரபஞ்ச சக்தி பெற உடல் பலமாக இருக்க வேண்டும்.  உடலும் உள்ளமும் சீராகவும், புத்துணர்வுடனும் ஒருங்கிணையும் போது தான் இறைசக்தி  கிடைக்கும்.

உடல் பலம்பெற்று, சக்தியனைத்தும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ பிரபஞ்ச சக்தி கிடைப்பதற்கு உண்ணும் உணவு, உறைவிடம் நன்கு அமைய வேண்டும்.  மென்மையான எளிதில் செரிமான மாகக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.  அவசர அவசரமாக சாப்பிடக் கூடாது.  முன்பு சாப்பிட்ட உணவு செரிப்பதற்குள் அடுத்த உணவை சாப்பிடக் கூடாது.  உணவு சாப்பிட்ட பின் நன்கு தண்ணீர் அருந்துவது அவசியம்.

இதைத்தான் சித்தர்கள்

யோகிக்கு ஒருவேளை உணவு

ரோகிக்கு இருவேளை உணவு

என்கின்றனர்.

மலச்சிக்கல் இருக்கக்கூடாது.  அதுபோல் மனச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இப்படி உடல் என்னும் ஆலயத்தை பேணிப் பராமரித்தால், பிரபஞ்ச சக்திக்கு அஸ்திவாரம் எளிதில் கிடைக்கும்.

No comments:

Post a Comment