Monday, 22 August 2011

தமிழின் முதல் மூன்று பத்திரிகைகள்


தமிழின் முதல் மூன்று பத்திரிகைகள்


தமிழில் வெளியான முதல் மூன்று பத்திரிகைகளுமே சென்னையை மையமாகக் கொண்டே தோற்றுவிக்கப்பட்டு, வெளியாயின.

சிப்பாய் கலகத்துக்கு முன்னர் நாடு முழுவதிலும் நாளிதழ்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆங்காங்கு, வார, மாத இதழ்கள்வெளிவந்த போதிலும், அச்சுச் சட்டக் கொடுமை காரணமாக அவை சரிவர வெளியிடப்படவில்லை.

சிப்பாய் கலகத்தின் பின்னர், ஆங்கிலோ- இந்தியப் பத்திரிகைகள் இந்தியரின் தனித்தன்மைகளையும், ஒற்றுமையையும், உரிமை வேட்கையையும் கிண்டல் செய்தன. எனவே, தேசப்பற்று மிக்கவர்கள் தங்களுக்கென தனியான இதழ் வேண்டும் என்ற வேட்கை கொண்டனர். இதன்காரணமாக நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வெளிவரத் துவங்கின.

அப்படித் தோன்றிய இதழ்கள் பிராந்திய மொழிப் பத்திரிகைகள் பெம்பாலும் சமயம், சமூகம், இலக்கியம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. சில சமயங்களில் அரசியல் செய்திகளை வெளியிட்டன. டி. முத்தசாமி அய்யர் உயர்நீதி மன்ற நீதிபதி பதவி பெற்றதை, ஆங்கிலோ-இந்தியப் பத்திரிகைகள் வெறுப்பை உமிழ்ந்து செய்தி வெளியிட்டன. இது 1878ல் ஆங்கிலப்பத்திரிகை "இந்து' தோற்றுவிக்கப்படுவதற்குக் காரணமானது.

தமிழைப் பொருத்தவரை, ஆங்கிலம் அறியாத மக்களும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால், "இந்து' பத்திரிகையைத் தோற்றுவித்த ஜி.சுப்பிரமணிய அய்யர் "சுதேசமித்திர'னைத் துவக்கினார்.

சாதி வெறி, சமயப்பொய்மைகளைக் களைய வேண்டும் என்ற உணர்வோடு, "திராவிடன்' பத்திரிகை வெளிவந்தது. சாதிப்பிணக்குகளுக்கான சூழ்நிலைகளை ஒடுக்கி, தேசிய உணர்வைப் பெருக்கும் நோக்கத்தில், "தேசபக்தன்' தோன்றியது.

சுதேசமித்திரன்:

1882ல் வார இதழாகத் தொடங்கி, 1887ல் வாரம் மும்முறை வெளியீடாக வளர்ந்து, 1889ல் நாளிதழாக மாறிய வரலாற்றைக் கொண்டது சுதேசமித்திரன். 

இதில் சில மாறுபட்ட கருத்துகள் இருந்த போதும், இந்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை வெளியீடான"இந்திய இதழியல் வரலாறு' எனும் நூலில் 1882ல் துவங்கி, "1897ல் வார இதழாகவும், 1899ல் நாளிதழாகவும் சுதேசமித்திரன் வெளிவந்தது' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கால இதழ்களின் போக்கு குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கைதரும் பொறுப்பேற்ற பாலசுந்தர முதலியார், 1897ல் அனுப்பிய அறிக்கையில், "சுதேசமித்திரன் தலையங்கங்களும், பிரச்னைகள் குறித்து அது எழுப்பும் வாதங்களும், அறிவுக்குப் பொருந்துவனவாகவே உள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 1889லேயே நாளிதழாக சுதேசமித்திரன் வெளிவந்துள்ளது தெளிவாகிறது.

திராவிடன்:

தமிழகத்தின் இரண்டாவது தமிழ்நாளிதழ் என்ற சிறப்பினை "திராவிடன்' பெறுகிறது. நீதிக்கட்சியின் சார்பாக 1916ல் தோன்றிய நாளிதழே திராவிடன். இதழியல் நூல்கள் பலவற்றில் திராவிடன் பற்றிய குறிப்பு காணக்கிடைக்கவில்லை. எட்டுப் பக்கங்கள் கொண்ட இந்நாளிதழின் ஆசிரியர் கனக சங்கர கண்ணப்பர். இவரே நெடுங்காலம் நடத்தி வந்தார். 1923ல் சண்முகம் பிள்ளையும், 1927 செப்., முதல் சில ஆண்டுகள் .வெ.ராமசாமியும் ஆசிரியராக இருந்துள்ளனர். இந்நாளிதழ் 1931ம் ஆண்டு வரை வெளிவந்திருக்க வேண்டும்.

தேசபக்தன்:

சுய ஆட்சிக்கிளர்ச்சியை ஒடுக்க நினைத்த ஜஸ்டிஸ் கட்சியின் ÷ பாக்கை எதிர்த்தும், வகுப்புவாத பிரிவினையைப் போக்கவும் நாளிதழ் கொண்டு வர திரு.வி.., நினைத்தார். அன்னிபெசன்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட நியூ இந்தியா ஆங்கில நாளிதழின் துணையாசிரியரான சுப்பராய காமத், திரு.வி..,வின் எண்ணத்துக்கு உதவினார்.

அன்னிபெசன்ட் அம்மையாரின் உதவியுடன், தமிழ் நாளிதழ் ஒன்று தொடங்கப்பட்டது. வெஸ்லி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக விளங்கிய திரு.வி.., அப்பத்திரிகையின் ஆசிரியரானார். தேசபக்தன் 1917 டிச., 7ம் தேதி வெளிவந்தது.

பிற்காலத்தில் பத்திரிகைகள் அதிகளவில் தோன்றின. வெவ்வேறு இடங்களில் இருந்து தற்போதைய பிரபல நாளிதழ்கள் துவக்கப்பட்டாலும், சென்னையே பிரதான பதிப்பாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment